பொள்ளாச்சி: மகாத்மா காந்தியடிகளின் 157ஆவது ஜெயந்தி தினத்தையும், என்ஜிஎம் கல்லூரி நிறுவனர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் ஐயா அவர்களின் 12ஆவது நினைவு தினத்தையும் முன்னிட்டு, பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழா அக்டோபர் 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்பு, அறம், அகிம்சை ஆகியவற்றைத் தன் வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து, மனித குலத்தை வாழ்விக்க வந்த மகாத்மா காந்தி, சமதர்மத்தை தாரக மந்திரமாக்கி ஒற்றுமையை வலியுறுத்திய எளிமையின் அடையாளமாக விளங்கியவர். ஒற்றை மனிதராய் ஓராயிரம் மக்களை ஒன்றிணைத்த தலைவராகவும், தன் வாழ்க்கையையே செய்தியாக வாழ்ந்து காட்டிய மாமனிதராகவும் அவர் திகழ்கிறார் என்பதை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை நினைவுகூரும் வகையில், இந்திய விடுதலைக்காகவும், சுதந்திர காற்றை மக்கள் சுவாசிப்பதற்காகவும் அகிம்சை முறையில் போராடி, சமூக சமத்துவத்தை மக்களிடையே உருவாக்கிய உத்தமர் மகாத்மா காந்தியை போற்றும் விழாவாக இது அமையவுள்ளது.
விழாவில் என்ஜிஎம் கல்லூரி தலைவர் டாக்டர். பி. கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்க, கல்லூரி செயலாளர் திரு. எம். பாலசுப்ரமணியம் முன்னிலை வகிக்கவுள்ளார். சிலையை கல்லூரி மாணவ, மாணவியர் திறந்து வைக்கவுள்ளனர்.
நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர் என அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.






